ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த அசுத்தமான மற்றும் கதிரியக்க நீரை சேகரிக்கும் சேமிப்பு கிடங்கு நிரம்பி வருவதால், அந்த நீர் கடலுக்கு அனுப்பப்படலாம் என்று ஜப்பான் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உருகிய உலைகளை குளிரச்செய்ய பல மில்லியன் டன்களில் இந்த மிகப்பெரிய டாங்குகளில் இந்த கதிரியக்க நீர் சேமித்து வைக்கப்படுகிறது.

கதிரியக்க நீர் கடலுக்கு அனுப்பப்படுவதை ஜப்பானின் மீனவர் குழுக்கள் மிக தீவிரமாக எதிர்க்கின்றன. அதேவேளையில் இது மிகவும் குறைந்த அளவு ஆபத்தைத்தான் விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என ஜப்பான் அரசு கூறுகிறது.

இதற்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும், அதன்தொடர்ச்சியாக சுனாமி பேரலைகளிலும் சிதைவடைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருட்கள் நீரில் வெளியேறுவதை தடுப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

நச்சுப் பொருள் கலந்த நீர் நிலத்துடன் ஓரளவு கலந்திருக்கின்றபோதிலும், அருகிலுள்ள பசிபிக் சமுத்திரத்தில் கலந்திருக்க வாய்ப்பில்லை என்று ஃபுகுஷிமா அணுமின் நிலையம் அப்போது தெரிவித்தது.