இலங்கையின் வடக்கே நகர்ந்த கஜா சூறாவளி அந்ததீவை மரணபயத்தில் பெரிதும் அச்சுறுத்தாமல் கடந்தாலும் அதிகாரத்தை கைவிட மறுத்து விடாது கறுப்பு அடையாளத்துடன் அந்தத்தீவில் சுழலும் அரசியல் சூறைக்காற்று இன்றும் தனது சொந்த நாடாளுமன்றத்தையேசூறையாடியது.

பெரும்பான்மை பலம் இல்லாத தமது தரப்பின் பலவீனத்தை மறைப்பதற்காக அந்தச்சூறாவளி கடந்த 2 நாட்களைப்போலவே நாடாளுமன்றத்தில் அழிச்சாட்டிய அமளி துமளிகளை செய்தது.
நாடாளுமன்றத்தின் கையேட்டுப்புத்தகங்களை ஆயுதங்களாக்கி வீசியெறிந்தது. குழப்பங்களை அடக்க வந்த காவற்துறையினர் மீதும் ஒரு சிலதர்ம அடிகளை கொடுத்தது.

சபாநாயகரின் அக்கிராசனத்தை ஆக்கிரமித்த அந்தசக்தி ஒரு கட்டத்தில் மிளகாய்த்தூள் தாக்குதலைக்கூடச்செய்தது. அதாவது அதிகாரத்தை தக்கவைக்க நடத்தப்பட்ட அதி -“காரம்” மிகுந்த தாக்குதல் இது.
கந்தகமேனியர் பிறந்த தாயகத்தை சிதைக்க ஒருகாலத்தில் கையுயர்த்தியவர்கள் மிளகாய்தூள் கரைசல் தோய்ந்த மேனியராக பரிதாபகரமாக காட்சியளித்தனர்.

தமிழினத்துக்கு எதிராக தரப்படுத்தல் முதல் முள்ளிவாய்கால் வரை எத்தனையோ நாசகாரம் மிகுந்த சட்டங்களைப்பிறப்பித்த சட்டவாக்க அரங்கில் கடந்த 3 நாட்களாக இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் போருக்குப்பின்னான நல்லிணக்க இலங்கையில் ஒரு முக்கியபதிவு.
ரணில் என்ற பிள்ளையையும் கிள்ளிவிட்டு மகிந்த என்ற தொட்டிலையும் ஆட்டிவிடும் மைத்தரி ஜனநாயகரீதியான பதில்களை வழங்காதது ஏன்? என்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு .

அது சரி! சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசு என்ற அடையாளத்தில் முறையான மக்களாட்சி அல்லது ஜனநாயகம் இருக்கிறதா?
ஏனெனில் அந்தத்தீவில் வாழும் இன்னொரு தேசிய இனத்துக்கு அந்தப்பாக்கியதை மறுக்கப்பட்டுத்தான் சில தசாப்தங்கள்ஆகிவிட்டனவே!

Prem Sivaguru