இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் அமைப்பின் (ஐ.எஸ்) தலைவர் கொல்லப்பட்ட, வட சிரியாவில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலின் காணொளியை அமெரிக்க ராணுவம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

பதுங்கு குழிக்குள் செல்வதற்கு முன்னர் அபு பக்கர் அல்-பாக்தாதி மறைந்திருந்த இடத்தை நோக்கி செல்கையில் தரையில் இருந்த ஆயுதப்படையினர் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டதை இந்த காணொளி காட்டுகிறது.

தரையிலிருந்த குகைக்குள் ஓடிய அல்-பாக்தாதி, அவர் தரித்திருந்த தற்கொலை குண்டை வெடிக்க செய்து தன்னை மாய்த்து கொண்டார். பின்னர் அந்த வளாகம் முழுவதும் வெடிபொருட்களால் அழிக்கப்பட்டது.

பக்தாதி மறைந்திருந்த இடம் இப்போது “பெரிய குழிகள் இருக்கும் வாகன நிறுத்துமிடம்” போல தோன்றுவதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க ராணுவ தலைமை தளபதி கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.

முன்னர் குறிப்பிட்டதைபோல மூன்று குழந்தைகள் அல்ல, அல்-பாக்தாதியோடு சேர்ந்து இரண்டு குழந்தைகள் இறந்ததாக அவர் கூறியுள்ளார்.