சீனா ஒரு பெரிய வெடிகுண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. சீனாவின் இந்த ‘மதர் ஆப் ஆல் பாம்ப்ஸ்’ ஆனது அமெரிக்காவின் வெடி குண்டுகளுக்கான சரியான பதிலாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நல்ல செய்தி என்னவென்றால், அறிக்கை கூறும் வெடி குண்டு ஆனது மிகவு பெரியது தான் ஆனால் அது அணுவாயுதம் கிடையாது. அதாவது மிகவும் சக்திவாய்ந்த அனு அல்லாத ஆயுதம் என்று பொருள். இந்த அறிக்கை ஆனது நாட்டின் உத்தியோகபூர்வ ஊடகத்தின் வழியாக வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை நிறுவனமான நோரின்கோ (NORINCO) ஆனது, முதல் தடவையாக வான்வழி வெடிகுண்டு ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அது தான் நாட்டின் மிகப்பெரிய அணு சக்தி இல்லாத குண்டு என்றும், அரசு நடத்தும் க்ளோபல் டைம்ஸ் அறிக்கை கூறி உள்ளது.

அணு சக்தியை கொண்டிருக்காத இந்த குண்டு, குண்டுகளின் தாய் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. அணு குண்டு அளவிற்கு இல்லை என்றாலும் கூட இந்த குண்டு ஆனது பெரும் பேரழிவை ஏற்படுத்தும் திறனை கொண்டு உள்ளதாம். அதனால் தான் சீனா இதை ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ என்று தனது அறிக்கையில் கூறி உள்ளதாம்.

பரிசோதனை நடக்காமலா? நடந்தது.வெடி குண்டுகளை சுமந்து செல்லும் சீனாவின் எச்-6கே பாமர் மூலம் இந்த குண்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனை வெடிப்பு வீடியோவை சீன நார்த் இண்டஸ்ட்ரீஸ் க்ரூப் கார்ப்பரேசன் லிமிடெட் (NORINCO) நிறுவனம், அதன் வலைத்தளத்தில் ஒரு விளம்பர வீடியோவாக வெளியிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு புதிய குண்டின் வெடிப்பு சோதனையையும் மற்றும் அதன் அழிவு சக்தியையும் சீனா வெளிப்படையாக, பொது பார்வைக்கு காட்டுவது இதுதான் முதல் முறை என்று அரசு நடத்தும் சின்ஹாவா நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.