பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் வரைவு “ஐரோப்பிய ஒன்றியத்துக்கே அதிக பலனளிப்பதை போன்று உள்ளது” என்று கூறிய டிரம்ப், அதன் காரணமாக பிரிட்டன் அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாமல் போகலாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆனால், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தெளிவாக உள்ளதாகவும், பிரிட்டன் உலக நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிரம்பின் கருத்துக்கு பதில் அளித்துள்ள பிரிட்டன் அரசின் செய்திதொடர்பாளர் ஒருவர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல் பிரிட்டன் அனைத்து நாடுகளுடனும் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை ஐந்துமுறை சந்தித்துள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வேலை குழுக்களின் வாயிலாக வாஷிங்டன்னுடன் மேலும் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்குரிய அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றித்துடன் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.