பல மாதங்களாக இருந்து வந்த அனுமானங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டெக்ஸாஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பேட்ரோ இவ்ரோக் 2020ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக முறையாக அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான போட்டியில் ஜனநாயக கட்சியில் பிரபலம் அடைந்து வரும் இவரும் இணைந்துள்ளார்.

46 வயதான பேட்ரோ இவ்ரோக் வெள்ளை மாளிகையை கைப்பற்றும் போட்டியில் இணைவதாக அறிவிக்கின்ற ஜனநாயக கட்சியின் 15வது உறுப்பினராவார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த டெட் குருஸூக்கு எதிராக கடும் போட்டியை பேட்ரோ இவ்ரோக் வழங்கினார். ஆனால், கடைசியில் இந்த முயற்சி வெற்றியடையவில்லை.

பல தசாப்த காலமாக டெக்ஸாஸில் எந்தவொரு குடியரசு கட்சி உறுப்பினரும் செயல்படாத அளவுக்கு மிகவும் திறமையாக பேட்ரோ இவ்ரோக் நடத்திய ஊடகங்களுக்கு அனுகூலமான பரப்புரை வடிவம், தேசிய அளவில் குடியரசு கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டியதோடு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவோடு ஒப்புமைகளையும் ஈர்த்திருந்தது.