அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

அமெரிக்கா – மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை அரசுக்கு தருவதற்கு ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் பலனில்லை, நேரம் தான் விரயமாகியது எனக் கூறிவிட்டு அதிபர் டிரம்ப் வெளியேறியுள்ளார்.

அதிபர் நிதானம் இழந்து பேசுகிறார் என மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது ஜனநாயக கட்சி.

அமெரிக்காவில் பகுதியளவு அரசாங்கம் முடக்கம் துவங்கியபிறகு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சம்பள நாள் வருகிறது. சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்களுக்கும் நாளை தினம் ஊழியம் வழங்கப்படாமலேயே கழியும்.

டிரம்ப் தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தாம் அதிபரானால் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இடையே எல்லைச்சுவர் எழுப்புவேன் எனத் தெரிவித்திருந்தார். எஃகு தடுப்பு சுவர் கட்டுவதற்காக சுமார் 5.7 பில்லியன் டாலர்கள் தொகை கேட்கிறார் அதிபர் டிரம்ப். ஆனால் பிரதிநிதிகள் சபையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜனநாயக கட்சியின் நிதி ஒதுக்க மறுத்துவருகின்றனர்.