அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்.. போராடிய பாலஸ்தீனர்கள்.. 28 பேரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்

8619

ஜெருசலேம்: அமெரிக்க தூதரகம் ஜெருசலேம் பகுதியில் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பாலத்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய இருக்கிறது. இதில் 28 பாலத்தீன மக்கள் பலியடைந்துள்ளனர். இஸ்ரேலின் தலைநகராக டெல் அவிவ் என்ற பகுதி இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கூறினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதனால் ஐநா சபையில் இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது

ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கான ஐநா சபையில் நடந்த வாக்கெடுப்பில் அந்நாடு தோல்வி அடைந்தது. ஆனாலும் இஸ்ரேலின் ‘டெல் அவிவ்’ என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்போவதாகவும் கூறி இருந்தார்ர். இன்னும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே டெல் அவிவ் நகரத்தில் தூதரகம் செயல்படும் என்று கூறினார். ஆனால் தற்போது வேக வேகமாக அவர் தூதரகத்தை மாற்றியுள்ளார். அதற்கான துவக்க விழாவும், புதிய தலைநகர் கொண்டாட்ட்ட விழாவும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டணியில், ஜெருசலேம் பகுதியில் நடத்தப்பட்டது. இது பாலத்தீன மக்களின் மத்தியில் பெரிய கொதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அவர்கள் கடந்த சில நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இந்த நிலையில், அந்த துவக்க விழா இன்று காலை திட்டமிட்டபடி நடந்ததால் கோபமடைந்த பாலத்தீன மக்கள் இஸ்ரேல் பாலத்தீன எல்லையில் போராட்டம் நடத்தினர். காசா பகுதியில் அவர்கள் போராடியதை அடுத்து ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. பதிலடியாக மக்களும் பெட்ரோல் குண்டுகளை வீசுவது, கல்லெறிவது என்று போராடினார்கள். இந்த போராட்டம் காரணமாக மொத்தம் 500 பேர் வரை மோசமாக காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதோடு 28 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். 100 பேர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள் என்று பாலத்தீன அரசு அறிவித்துள்ளது.