மன்னார் நகர் நிருபர்

11.01.2019

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டி சாரதியை கடமை
நேரத்தில் மூன்று பேர் கொண்ட குழுவினர் தாக்கியதைத் தொடர்ந்து நேற்று
வெள்ளிக் கிழமை (11.01.2019) பேசாலை வைத்தியசாலை ஊழியர்கள் ஒரு நாள் பணி
பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு உள்ளான அம்புலன்ஸ் வண்டி சாரதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் சம்பவம்பற்றி தெரியவருவதாவது.
நேற்று முன்தினம் வியாழக் கிழமை (10.01.2019) பேசாலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை தீவிர சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற அம்புலன்ஸ் வண்டியானது அங்கு நோயாளர்களை

அனுமதித்துவிட்டு இரவு 10 மணியளவில் மீண்டும் பேசாலை நோக்கி வந்துள்ளது.

அந்நேரம் மன்னார் தலைமன்னார் பிரதான பாதை மன்னாருக்கும்
தாராபுரத்துக்கும் இடையிலிருந்து ஒரு முச்சக்கர வண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழுவினர் அம்புலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்து பேசாலை
சவுக்காலைக்கு அருகாமையில் இவ் அம்புலன்னஸ் வண்டியை இடைமறித்துள்ளனர்.

இருந்தும் பேசாலை வைத்தியசாலையிலிருந்து இன்னொரு நோயாளியை எடுத்துச்
செல்ல வேண்டியிருந்ததால் அம்புலன்ஸ் வண்டியை நிறுத்தாது பேசாலைை வைத்தியசாலையை நோக்கி வந்துள்ளது.ஆனால்  முச்சக்கர வண்டியில் வந்த இந்த இளைஞர்கள் கொண்ட குழுவினர் இவ் வண்டியை பின்தொடர்ந்து பேசாலை வைத்தியசாலைக்கு முன்பாக வந்து அம்புலன்ஸ்

வண்டியை மறித்து சாரதியை நையப்புடைத்துள்ளதாகவும் அத்துடன் பொல்
ஒன்றினால் சாரதியை தாக்க முற்பட்டபோது அது அம்புலன்ஸ் வண்டிக்கு சிறு
சேதத்தையும் உண்டு பண்ணியுள்ளதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அம்புலன்ஸ் சாரதியை நையப்புடைக்கும் சம்பவத்தை அறிந்த வைத்தியசாலை ஊழியர்
மற்றும் அருகில் இருந்த பொலிசார் அவ்விடத்துக்கு வந்து தாக்குதலை
நடாத்திய நபர்களை கைது செய்துள்ளனர்.

அம்புலன்ஸ் வண்டி சாரதி வாகனத்தை செலுத்திக் கொண்டு வருகையில் எதிரே வந்த
முச்சக்கர வண்டிக்கு டிம் வெளிச்சம் போடாமல் வந்ததே காரணம் என ஆரம்ப விசாரனையில் தெரியவந்துள்ளது.

பேசாலை பொலிசார் தாக்குதல் நடாத்திய மூவரையும் முச்சக்கர வண்டியையும்
மற்றும் தாக்குதலுக்கு பாவித்த தடயப் பொருளையும் கைப்பற்றி நீதிமன்றில்
ஆஐராக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான அம்புலன்ஸ் வண்டி சாரதி
எஸ்.வேந்தக்கோன் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இவ் சம்பவத்தைக் கண்டித்து நேற்று வெள்ளிக் கிழமை (11) பேசாலை பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இவ் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவங்களும் உண்டு.