மன்னார் நகர் நிருபர்

11.09.2019

இனங்கள் ரீதியாக அரசியல் மாற்றம் ஒன்று கொண்டு வர வேண்டும். சகல
மதங்களுக்கும் சகல மொழிகளுக்கும் சம உரிமை கொண்டதாக யாப்பு சீர்திருத்தம்
மேற்கொள்ளும்போதுதான் இலங்கையில் சகல மக்களும் நிம்மதியுடன் வாழலாம் என
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை (10.09.2019) தேசிய சமாதானப் பேரவை
மற்றும் தொடர்பாடலுக்கான பயிற்சி நிலையம் அமைப்பும் இணைந்து மதங்களுக்கு
இடையே நல்லிணத்தையும் சகவாழ்வையும் முன்னெடுத்து வரும் நோக்குடன் பல
தரப்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை பெற்று
வருகின்றனர்.

இந்த வகையில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை (10.09.2019) தேசிய
சமாதானப் பேரவை மற்றும் தொடர்பாடலுக்கான பயிற்சி நிலையம் அமைப்பும்
இணைந்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை யூலி ஹொட்டலில்
கருத்தமர்வை மேற்கொண்டனர்.

அவ்வேளையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தனது
கருத்துக்களை தெரிவிக்கையில்

நான் இங்கு கட்சி ரீதியாக பேசவில்லை. என்னை பொறுத்தமட்டில் எங்கள் கட்சி
மட்டுமே யாப்பு சீர்திருத்தத்தை வேண்டிக் கொண்டு இருக்கின்றது.
எமது மக்களுக்கு நாங்கள் அபிவிருத்தியை வழங்க முடியாதிருப்பதன் காரணம்
நாங்கள் யாப்பு சீர் திருத்தத்தை கேட்பதின் காரணமாகவே.

நீங்கள் சகல மதத்தைச் சார்ந்த மக்கள் மத்தியில் சமானமும் சகவாழ்வும் அமைய
வேண்டும் என செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள்.

சகல இன மக்களிடமும் சமாதானமும் சக வாழ்வு நிலை கொள்ள வேண்டுமானால்
யாப்பு சீர் திருத்தம் மிக அவசியமானது என தேசிய சமாதானப் பேரவையாகிய
நீங்கள் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப் படுத்தப்பட வேண்டும்.

நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்பவில்லை ஒரு சில அமைச்சர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு சீர் திருத்தம் தேவையில்லையென
தெரிவித்து நிற்கின்றனர்.

நீங்கள் நாட்டின் எட்டு பிரதேச செயலகப் பிரதேசங்களில் உங்கள் இந்த செயல்
திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவிக்கின்றீர்கள்.

ஆகவே நீங்கள் சகல கட்சிகளிடமும் யாப்பு சீர் திருத்தம் விடயத்தை
வலியுறுத்த வேண்டும். இன்று இலங்கையில் மக்கள் நிம்மதியின்றி இருப்பது
இந்த யாப்பு சீர்திருத்தத்தை கொண்டு வராமையே காரணமாகும்.

எனக்கு நேற்று (திங்கள் கிழமை 09.09.2019) ஒரு தகவல் கிடைக்கப் பெற்றது
பௌத்த மக்கள் இல்லாத இடமாகிய தரவன்கோட்டை பகுதியில் புத்தர் சிலை
வைக்கப்பட்டுள்ளதாக. இது விடயமாக நான் பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு
சென்றுள்ளேன்.

அடுத்து சக வாழ்வு என்பது கிராமபுற அனைத்து மக்கள் மத்தியிலும்
புரிந்துணர்வு இருக்க வேண்டும். நீங்கள் தேசிய சர்வமத பேரவை என்ற
போர்வையில் ஒரு சில திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகின்றீர்கள்.

என் மனதில் ஒரு சந்தேகம் நீங்கள் நினைக்கின்றீர்களா இன மத முரன்பாடுகள்
குறைந்துள்ளன என்று. என்னைப் பொறுத்த மட்டில் நான் பலருடன் சகஐமாக பழகிக்
கொண்டிருப்பவன். ஆனால் நான் சொல்லுகின்றேன் மத இனங்களுக்கிடையே முரன்பாடு
குறையவில்லை. மாறாக நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டுதான்
இருக்கின்றது.

தற்பொழுது வெளிச்சமாக தெரிகின்றது இன மதப் பிரச்சனை உருவாகிக் கொண்டே
செல்லுகின்றது. இதற்கு அரசியலும் காரணமாகவும் இருக்கலாம்.

நான் இப்படியான அரசியலைச் செய்ய விரும்பவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது
பாரிய விளைவை ஏற்படுத்தக் கூடிய நிலமை இருக்கின்றது.
ஆகவே நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் எந்தந்த இடங்களில்
இவ்வாறான பிரச்சனைகளை இனம் காணுகின்றீர்களோ அந்தந்த இடங்களுக்குச் சென்று
அந்த நபர்களைத்தான் முதலில் சந்திக்க வேண்டும்.

இப்பொழுது இங்கு சமூகம் அளித்திருப்பவர்களிடம் நூறு வீதமான புரிந்துணர்வு
இருக்கலாம். ஆனால் இந்த புரிந்துணர்வு அங்குதான் தேவையாகும்.

சமாதானத்துக்கும் சக வாழ்விலும் பிரச்சனைகளை என்னில் கண்டறிந்தால்
நீங்கள் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். நான் அதற்கான பதில்களை தருவதற்கு
தயாராக இருக்கின்றேன்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் நான் ஒரு சில அரசியல்வாதிகளின்
பிழைகளை சுட்டிக் காட:டுகின்றேன். இதனால் சிலர் என்னை தவறாக நினைக்கலாம்.

ஆனால் நான் எந்தவேளையிலும்; இன மத ரீதியாக பொது மக்களுக்கு எதிராக எந்த
தீங்கும் செய்யவில்லை. அப்படி நான் பொது மக்களுக்கு எதிராக
செயல்பட்டிருந்தால் நான் அதற்கு சரியான விளக்கத்தை உங்களுக்கு தர தயாராக
இருக்கின்றேன்.

பிரச்சனைகள் தலைதூக்கும் இடங்களுக்கு நான் பல முறை சென்று அவர்களின்
பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாடி சரி பிழைகளைப் பற்றி அவர்களுடன்
கலந்துரையாடி வருகின்றேன்.
நீங்களும் இது சம்பந்தமாக நல்ல செயல்களை முன்னெடுத்து வருவதால் எனது
உதவியும் உங்களுக்கு தேவைப்பட்டால் நான் உதவி செய்ய ஆய்த்தமாக
இருக்கின்றேன்.

இங்குள்ள சகல மதக்குருக்கள் மத்தியில் புரிந்துணர்வு இருக்கின்றது. ஆகவே
இந்த புரிந்துணர்வை பிரச்சனைக்குரியவர்களை இனம் கண்டு அவர்கள் மத்தியில்
அதை முன்னெடுக்க வேண்டும்.

மன்னாரில் மதங்களுக்கிடையே தோன்றியுள்ள பிரச்சனைகள் பாரிய பிரச்சனைகள்
அல்ல. அவைகள் மிக சிறியதொன்றாகும். இந்த சின்ன பிரச்சனைகளை எமக்குள்
தீர்க்க எம்மால் முடியாது என்றால் எவ்வாறு பாரிய பிரச்சனைகள்
தீர்க்கப்படும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது எமக்குள் நல்லதொரு பரிந்துணர்வு இல்லையென்றால் எமக்காக பல
உயிர்களை சொத்துக்களை உறவுகளை இழந்து நின்றவர்கள்
பரிதாபத்துக்குரியவர்களாக இருக்கின்றார்கள் என்றார்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் ஒரு கேள்வி
எழுப்பப்பட்டது. அதாவது உங்களுக்கும் அமைச்சர் றிசாட்டுக்குமிடையே
கருத்து மோதல் இடம்பெறுகிறதே என தெரிவிக்கப்பட்டபோது

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில் அன்மையில் நான்
தாராபுரம் சென்றிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த ஒரிருவர் நீங்கள்
கேட்பதுபோல் என்னிடம் ஒரு சில கேள்விகளைத் தொடுத்தனர் அதற்கு நான்
அவர்களுக்கு தெரிவித்ததாவது நீங்கள் முஸ்லிமாக இருந்தால் நான் செய்வது
சரி என தோன்றும்.

ஆனால் நீங்கள் அமைச்சர் றிசாட்டின் விசுவாசியாக இருந்தால் நான் செய்வது
உங்களுக்கு தவறாகத்தான் தெரியும் என தெரிவித்தேன்.

அத்துடன் அவர்களுக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் சொன்னதின்
பின்பே இதை இவ்வாறு தெரிவித்தேன். பின் அவர்கள் உண்மை நிலையை உணர்ந்ததாக
எனது கையைப் பிடித்து தெரிவித்தார்கள்.

அவர்கள் கேட்ட கேள்வி இதுதான் முஸ்லீம் மக்களுக்கு வந்த 2500 மில்லியன்
ரூபாவை நான் தடைசெய்ததாக தெரிவித்தனர். அதற்கு நான் முஸ்லீம் மக்களுக்கு
வந்த நிதியை நான் நிறுத்தவில்லை.

ஆனால் மீள்குடியேற்ற அமைச்சர் ஒருவர் இருக்கின்றபோது அதை ஏன் வர்த்தக
அமைச்சருக்கு ஒதுக்கின்றீர்கள். இதைத்தான் நான் சொன்னது என்றார்.

இன்று அந்த நிதியைத்தான் மன்னார் மாவட்ட முழுதும் உள்ள மக்களுக்கு வாகன
சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது. இதனால் பாதிப்படைவது யார்
முஸ்லீம் மக்கள்தான் என்றார்.

இந்தப் பணம் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நோக்கம் பாதிப்படைந்த
முஸ்லீம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக
ஒதுக்கப்பட்டது.

அன்மையில் புதுக்குடியிருப்பு கிராமத்தின் ஒரு முஸ்லீம் மரண வீட்டுக்குச்
சென்றபொழுது அக் குடும்பத்துக்கு சரியான வீடு இல்லை. ஒரு கொட்டிலில்தான்
பிரேதத்தை வைத்திருந்தார்கள்.

என்னைப் பொறுத்தமட்டில் மதம் ரீதியான இனம் ரீதியான விடயங்களை நான்
எங்கும் கதைப்பதில்லை. அதேவேளையில் அரசியல்வாதி தவறு செய்தால் அதை நான்
சுட்டிக்காட்டுகின்றேன்.

நான் தேர்தலின்போது வீதி அமைத்து தருவேன், கட்டிடம் கட்டித் தருவேன் என
சொல்லி வாக்கு கேட்கவில்லை. மாறாக நான் உண்மையாக இருப்பேன் என தெரிவித்தே
வாக்கு கேட்டேன் என்றார்.