உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் அரை இறுதியில் இங்கிலாந்து, குரேஷியா சந்திக்கின்றன. 52 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் வெறியோடு உள்ள இங்கிலாந்து, மிகவும் வலுவான நடுகள வீரர்களை கொண்ட குரேஷியா என்ற மிகப் பெரிய தடுப்பை தாண்ட வேண்டிய நிலையில் உள்ளது.

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் லுகா மோட்ரிக், பார்சிலோனாவுக்காக விளையாடும் இவான் ராகிடிக் தற்போது உலகின் மிகச் சிறந்த நடுகள வீரர்கள். இவர்கள் இருவரும் இணைந்திருப்பது குரேஷியாவுக்கு மிகப் பெரிய பலம். இவர்களைத் தவிர அணியில் உள்ள 11 வீரர்கள் குறைந்தபட்சம் 40 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி இதுவரை பெரிதாக எந்த சவாலையும் சந்திக்கவில்லை. முதல் முறையாக சந்திக்க உள்ளது.

இந்த உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாத அணி என்ற கெத்துடன் அரை இறுதியில் விளையாடுகிறது குரேஷியா. முதல் முறையாக அரை இறுதியில் விளையாடினாலும், அனுபவமிக்க முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை 3-0 என லீக் ஆட்டத்தில் வென்றதன் மூலம் தனது முத்திரையை பதித்துள்ளது. கோப்பையை வெல்லக் கூடிய அணி என்று பெயர் எடுத்தாலும், முக்கிய ஆட்டங்களில் இங்கிலாந்து பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் அதிக கோலடித்தோர் பட்டியலில் 6 கோல்களுடன் உள்ள ஹாரி கேன் ஏதாவது மேஜிக் செய்தால், மற்றும் குரேஷியா சொதப்பினால், பைனல் நுழைவதற்கு இங்கிலாந்துக்கு வாய்ப்பு உள்ளது.