அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இலங்கை முழுவதிலும் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

கடந்த 22 வருடங்களாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனைக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

1994ஆம் ஆண்டு காலப் பகுதி வரை, தாம் சிறந்த முறையில் சம்பளத்தை பெற்ற போதிலும், 1994ஆம் ஆண்டு பெரேராவின் சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாரிய சம்பள முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.

1997ஆம் ஆண்டு முதல் தாம் இந்த பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபத் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார்.

இதனால் நாடு முழுவதிலும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிடுகின்றது.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசாரால் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தப்பட்டமைக்கு இன்றைய தினம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆசிரியர்கள் இன்று காலை கறுப்பு பட்டிகளை அணிந்து போராட்டங்களை நடத்தியிருந்தனர்.