மதம் மற்றும் அறிவியல் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கையெழுத்து பிரதி ஒன்று எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகைக்கு, அதாவது 2.9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

‘கடவுள் கடிதம்’ என அழைக்கப்படும் அந்த கடிதம் 1954 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. நியூயார்க்கில் விடப்பட்ட ஏலத்தில் 1.5 மில்லியன் டாலர்களுக்கு இந்த கடிதம் விற்குமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஒன்றரை பக்க கடிதமானது ஜெர்மன் தத்துவ அறிஞர் எரிக் குட்கைண்டுக்கு எழுதப்பட்டது.

அறிவியல் மற்றும் மதத்துக்கு இடையேயான விவாதத்தின் முக்கிய சாட்சியமாக இந்த கடிதம் பார்க்கப்படுகிறது.

ஐன்ஸ்டீனின் தாய் மொழியான ஜெர்மனியில் எழுதிய இந்த கடிதத்தில் இறை நம்பிக்கை குறித்து விவரித்து இருக்கிறார் அவர்.

இறைவன் என்ற வார்த்தை எனக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், மனித பலவீனத்தின் வெளிபாடு அது என்று அந்த கடிதத்தில் விவரித்து உள்ளார் ஐன்ஸ்டீன்.

மேலும் அவர், “பைபிள் மரியாதைக்குரிய விஷயங்களின் தொகுப்புதான். ஆனால், அதுவும் ஒரு மற்றொரு புனைவுதான்” என்கிறார். எப்படி விளக்கம் கூறினாலும், அது எவ்வளவு நுட்பமாக இருந்தாலும், இதில் எதையும் மாற்ற முடியாது,” என்று அந்த கடிதத்தில் விவரித்துள்ளார் அவர்.