ஆஷஸ் தொடரின் 2வது ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார். பரிமிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 374 ரன்களும் குவித்தது.

2வது இன்னிங்சில் ஸ்மித் 142 ரன்களும், வேட் 110 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, ஆஸ்ரேலியாவின் நாதன் லயன், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சரண்டரானது. இறுதியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருது ஸ்டீவன் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது 4 ஓவர்களையே வீசினார் ஆண்டர்சன். அவருக்கு தற்போது வயது 37. வலது காலின் பின் பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக மேற்கொண்டு பவுலிங் பண்ணவில்லை. மருத்துவ பரிசோதனையில் தசை பிடிப்பு என்பது உறுதியானது. அவரது உடல் நிலையை இங்கிலாந்து மற்றும் லான்ஷயர் கிளப் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 14-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆண்டர்சன் விலகியுள்ளார்.