2019 ஐசிசி உலகக்கோப்பை இறுதியாட்டம் டையில் முடிந்து, சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது போல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆஷஸ் தொடரும் 2-2 சமனில் முடிந்துள்ளது.

ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்தது. பட்லர் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் தரப்பில் மிட்சல் மார்ஷ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் பெரிதும் நிலைகுலைந்தது. ஆர்ச்சர் 6 விக்கெட்டுகள் எடுக்க, ஆஸ்திரேலியா 225 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 329 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் என்ற இமாலய இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், ஆஸ்திரேலியா 263 ரன்கள் மட்டுமே எடுக்க, 135 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது.