வாஷிங்டனின் பெடரல் வே பகுதியைச் சேர்ந்தவர் ரஹேல் முஹமத் (Rahel Mohamad). அவருடைய  ஐபோன் x மாடல் மொபைல் வெடித்ததாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆப்பிள் அண்மையில் அதன் சாதனங்களுக்காக ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் பிறகு அதை மேம்படுத்தும் வகையில், மேலும் சில அப்டேட்களையும் கொடுத்து வருகிறது. ரஹேல் முஹமத் அவரது ஐபோனை iOS 12.1 வெர்ஷனுக்கு அப்டேட் செய்த பிறகுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்டேட் தொடங்கும்போது போன் இயல்பாகத்தான் இருந்திருக்கிறது அதன் பின்னர் அப்டேட் முழுமை பெரும் சமயத்தில் போனில் இருந்து புகை வந்திருக்கிறது. பின்னர் தீப்பிடித்து எரிந்திருக்கிறது.

இந்தப் போனை வாங்கி பத்து மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதாகவும், ஆப்பிள் நிறுவனத்தின் சார்ஜர் மற்றும் கேபிளையே போனுக்கு சார்ஜ் ஏற்றப் பயன்படுத்தியதாகவும் இவர் தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலை புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டார் ரஹேல் முஹமத். அதற்கு ஆப்பிள் நிறுவனம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில்,  “அந்தச் சம்பவத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை, இதைப் பற்றி தனியாக மெசேஜ் அனுப்புங்கள்” என்று அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் ஆப்பிள் நிறுவனம் வெடித்த ஐபோனை தங்களிடம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.