தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை, போக்குவரத்து வசதி இல்லை… ஆனாலும் தலைநகரில் நம் மக்களின் கொண்டாட்ட முழக்கம் கணீர் கணீரென்றிருந்தது.

ஆகஸ்டு 15 சுதந்திரம் தரலாம் என அறிவிக்கப்பட்டவுடனேயே நம்ம ஜோதிடர்கள் கருத்து சொல்ல வந்துவிட்டார்கள். “இன்னைக்கு நாள் சரியில்லை… அதனால 2 நாள் கழிச்சி சுதந்திரம் கொடுக்கலாமே” என தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

மவுண்பேட்டன் உறுதி 

ஆனால் இதெல்லாம் பிரிட்டிஷ்காரர்களிடம் எடுபடுமா என்ன? அவர்களது கணக்குப்படி நடுஇரவு 12 மணி என்பது புதிய நாள் தொடங்குவதாக கணக்கு. ஆனால் நமக்கோ 5 மணிக்கு கோழி கூவினால்தான் அதாவது புதிய நாள் என்று அர்த்தம். ஜோதிடர் சொல்வதையெல்லாம் காதிலே வாங்காத மவுண்ட்பேட்டன் ஆக.15 என்பதிலே விடாப்பிடியாக இருந்தார்.

விடியல் பிறந்தது 

நள்ளிரவு 12 மணி ஆனது. டிங் டாங் என கடிகார மணி ஓங்கி ஒலித்தது. உடனே ஒரு பெரிய மாடம் ஒன்றிலிருந்து ஒருவர் வந்து சங்கநாதத்தை ஊதினார். அந்த நாதர் ஊதுபவர் கைதேர்ந்த ஒரு கலைஞராம். சங்கநாதம் ஊரெங்கும் ஒலித்தது. புதிய தேசம், விடியல் தேசம், சுதந்திர தேசம் பிறந்துவிட்டதென அறிவிக்கப்பட்டது. அரங்கம் வெளியே கூடியிருந்த எல்லோரும் இரு கரங்களை தட்டி தட்டி சந்தோஷத்தை எழுப்பினார்கள். பின்னர் வந்தே மாதரம் என ஒன்றாக கூப்பாடு இட்டார்கள்.

முதல் சுதந்திர உரை 

நேரு தலைமையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நம் தேசத்தை காப்போம், இந்திய மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் என நேரு சொல்ல சொல்ல அனைவரும் அதை திருப்பி சொல்லி சபதம் போட்டுக் கொண்டார்கள். ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்வை தட்டியெழுப்பும் நேதாஜியின் ஒற்றை சொல்லான ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் தன் முதல் சுதந்திர உரையை துவங்கினார் நேரு.

அந்த ஒற்றை சொல் 

நேதாஜிக்கும்-நேருவுக்கும் ஆயிரம் முரண்பாடுகள், கருத்து வேற்றுமைகள், நின்று வெவ்வெறு நிலைகளில் நின்று போராட்டத்தை கையில் எடுத்தவர்கள்தான். ஆனாலும் நேதாஜியின் அந்த ஒற்றை சொல் முழக்கம் பாரதத்திற்கு புத்தொளியும், புத்துயிரும் ஊட்டியது. நேருதான் தன் சுதந்திர முதல் உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை துவக்கி வைத்தார்.

இலவச குல்லா 

தேசத்தின் பல்வேறு கிராமங்களில் பெரும்பாலானோர் கதர் ஆடை அணிந்து கொண்டு, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினர். அதேபோல அன்றைய தினம் நம் தமிழகத்தின் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கதர் குல்லா இலவசமாக வழங்கப்பட்டு, இனிப்பும் வழங்கப்பட்டதாம். அன்றைய நாள், ஒவ்வொருவரும் வீதிகளில் நடைபோட்டபோது, இந்தியன் என்ற உணர்வும், என் நாடு என்ற இறுமாப்பும் கலந்த சந்தோஷம் அவர்களின் முகங்களில் பளிச்சிட்டது!