கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகளால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மட்டும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகளுக்கு சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவசரகால நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் சற்று தாமதமாக தொடங்கிய பருவமழை சரிவர பெய்யவில்லை. அவ்வப்போது மிகக் குறைந்த அளவு மழை மட்டுமே இருந்தது.

கடந்த ஐந்து நாட்களாகத்தான் பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளது. சீரான இடைவெளியில், பெய்யும் பருவமழை தற்போது ஒரே நேரத்தில் அதிகமாக பெய்துவருகிறது.

தொடர் கனமழையின் காரணமாக இந்தப் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் மண்சரிந்தும், மரங்கள் விழுந்தும் கிடப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் பலவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.