இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் அரங்கில் புது சாதனை படைத்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, மொஹாலியில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இதில் முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், எதிர்பார்த்தது போல ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தார். ராயுடுக்கு பதில் ராகுல் இடம் பிடித்தார். தவிர, ரவிந்திர ஜடேஜாவுக்கு பதில் சகாலும், முகமது ஷமிக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் இடம் பெற்றனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர்களான ரோகித் சர்மா (95), தவான் (143) ஆகியோர் கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கு:
கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் ’டக்’ அவுட்டானார். மார்ஷ் (6) தாக்குபிடிக்கவில்லை. பின் இணைந்த கவாஜா (91), ஹேண்ட்ஸ்கோம் (117) ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

தொடர்ந்து வந்த டர்னர், இந்திய பவுலர்களை பதம் பார்த்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 6 ஓவரில் 64 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 

இதையடுத்து டர்னர் சிக்சர்களாக பறக்கவிட, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என ஆஸ்திரேலியா சமன் செய்தது. இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 13ம் தேதி டெல்லியில் நடக்கிறது. 

இந்நிலையில் ஒருநாள் அரங்கில் அதிக ரன்களை வெற்றிகரமாக துரத்தி புது வரலாறு படைத்தது ஆஸ்திரேலிய அணி.