ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு துறையிலும் விருது பெறும் நபரை அதற்கான கமிட்டி தேர்வு செய்யும். அந்த வகையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் நபரை ஸ்வீடிஷ் இலக்கிய கமிட்டி தேர்வு செய்கிறது.

இந்த நிலையில் ஸ்வீடிஷ் இலக்கிய கமிட்டியில் பாலியல் முறைகேடுகள் தொடர்பான சர்ச்சை எழுந்தது. பாலியல் வன்கொடுமை வழக்கில் புகைப்பட கலைஞரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மனைவியான கவிஞர் கத்தரினா கமிட்டியை விட்டு விலகினார். மேலும் இக்கமிட்டியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் ராஜினாமா செய்தனர். இந்த பிரச்சினைகளால் 2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபால் பரிசு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது புதிய உறுப்பினர்களுடன் ஸ்வீடிஷ் இலக்கிய கமிட்டி சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த ஆண்டுக்கும் சேர்த்து இந்த ஆண்டு 2 பேருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும் 2 இலக்கியவாதிகள் யார் என்பதை வருகிற அக்டோபர் மாதம் ஸ்வீடிஷ் இலக்கிய கமிட்டி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.