கடந்த ஜூலை மாதத்தில் சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரான் நாட்டு எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டர் விடுவித்ததையடுத்து அந்த கப்பல் துறைமுகத்தை விட்டு கிளம்பியது.

மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் அந்த கப்பல் சென்று கொண்டிருப்பதாக கடல் கண்காணிப்பு கருவிகள் வெளியிடும் படங்கள் காண்பித்துள்ளன.

கிரேஸ்-1 என்ற பெயரில் இருந்து அட்ரியன் டார்யா-1 என பெயர் மாற்றப்பட்ட அந்த கப்பலை மீண்டும் பிடித்து வைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை முன்னதாக ஜிப்ரால்டர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தான் தடுத்து வைத்திருந்த எண்ணெய் கப்பலை விடுவிக்கும் முடிவை ஜிப்ரால்டர் எடுத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது கடைசி நிமிட கோரிக்கையை அமெரிக்கா முன்வைத்தது.

தான் விடுவித்த கப்பல் தங்கள் நாட்டு துறைமுகத்தை விட்டு கிளம்பியது குறித்த தகவலை இன்னமும் உறுதிபடுத்தாத ஜிப்ரால்டர், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார மற்றும் பிற தடைகள் ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி பொருந்தாது என்பதால், தன்னால் அமெரிக்காவின் புதிய ஆணையை ஏற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

அனுமதி இல்லாத பகுதியில் எண்ணெய் கொண்டு சென்றதாக ஒரு மாதமாக தடுத்து வைத்திருந்த இரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி சனிக்கிழமையன்று விடுதலை செய்தது ஜிப்ரால்டர்.

பிரிட்டன் தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரின் அதிகாரிகளிடம், கப்பலில் உள்ள எரிபொருள் சிரியாவுக்கு செல்லாது என இரான் எழுத்து வடிவில் உறுதியளித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.