இறந்துபோனவரின் கணக்கில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் புதிய வசதிகள் குறித்து பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் உலகில் அதிக பயனாளர்களைக் கொண்ட சமூக வலைத்தளமாக உள்ளது. இந்த இணையதளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இறந்தவரின் கணக்கை அவரது நெருங்கிய நபர் ஒருவர் கையாளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஒருவர் தன் இறப்புக்குப் பின் தனது கணக்கை கையாள ஒருவரைத் தேர்வு செய்யலாம்.

இறந்த ஒருவரின் பக்கம் அவர் நியமித்த நபரால் நினைவுகூரல் பக்கமாக மாற்றப்படும். பின், அந்தப் பக்கத்தை இறந்தவரின் நினைவாக இவர் கையாள முடியும்.

இந்நிலையில் இத்தகைய நினைவுகூரல் பக்கங்களுக்கு மூன்று புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் அளிக்கிறது. இனி நினைவுகூரல் பக்கங்களில் தனியாக இறந்தவரை நினைவுகூரும் பதிவுகளுக்கான தனி பகுதி ‘tributes section’ இருக்கும். இதில் அந்தப் பக்கத்தைப் பார்வையிடும் பயனாளர்கள் இறந்தவருக்கு மரியாதை செய்யும் வகையில் பதிவுசெய்யலாம்.

இத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நினைவுகூரல் பக்கத்துக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுப்பது (Event invitation) போன்ற விரும்பத்தகாத விஷயங்களைத் தானாகவே தவிர்க்கும் அம்சமும் புதிதாகச் சேர்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 3 கோடி பேருக்கு மேல் பேஸ்புக்கில் நினைவுகூரல் பக்கங்களை பார்வையிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.