இலங்கை அணி பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. சுமார் 10 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

அந்த பாதுகாப்பால் வீரர்கள் ஓட்டலிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் வீரர்கள் சோர்வடைந்தனர் என்ற இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்திருந்தார்.சில்வாவின் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறுகையில் ‘‘இலங்கை கிரிக்கெட் குழுவின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை அணிக்கு அதிபர் அளவிற்கான பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் காயப்படுத்தும் அளவிற்கான இலங்கை கிரிக்கெட் தலைவரின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது. முடிந்த அளவிற்கு அவர்கள் வசதியாக தங்க வேண்டும் என்று விரும்பினோம்’’ என்று தெரிவித்துள்ளது.