இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் அகிலா தனஞ்ஜெயா. 25 வயதாகும் இவரது பந்து வீச்சு ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழும்பியது. பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐசிசி-யிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்று தொடர்ந்து பந்து வீசினார்.

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது தனஞ்ஜெயா விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் என புகார் கூறப்பட்டது.

இதனால் ஐசிசி-யின் அனுமதி பெற்ற சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது தெரியவந்தது. 12 மாதத்திற்குள் இரண்டுமுறை இந்த விவகாரத்தில் சிக்கியதால், ஐசிசி ஓராண்டு தடைவிதித்துள்ளது.

இதனால் தனஞ்ஜெயா சர்வதேச போட்டிகளில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பந்து வீச இயலாது. தனஞ்ஜெயா 6 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.