புத்தர் – இயேசு – நபிகள் நாயகம் ஆகியோர் அவ்வாறுதான் நமக்கு கிடைத்தார்கள். ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு பிறகுதான் காலதேவனின் கடைக்கண் பார்வை இந்திய மண்ணின் மீது விழுந்தது. அதன் விளைவாகவே காந்தி என்ற மகாத்மா நமக்கு கிடைத்தார்!!

நினைத்து பார்த்தால் நம்பவே முடியவில்லை! இப்படி ஒரு மனிதர் பிறந்ததையும், இப்படி ஒரு மனிதர் வாழ்ந்ததையும், இப்படி ஒரு மனிதர் மறைந்ததையும் சத்தியமாய் நம்மால் நம்ப முடியவில்லை.”காந்திஜி என்ற ஒரு மனிதர் இப்படி வாழ்ந்தார் என்று சொன்னால் வருங்கால தலைமுறையினர் நம்பக்கூட மாட்டார்கள்” என்றார் பெர்னாட்ஷா. இதுவரை தோன்றிய மகான்களுக்கெல்லாம் அஹிம்சை என்பது ஒரு தத்துவம். மனித குலத்தை துன்ப துயரங்களிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு தாரக மந்திரம். அகிம்சை என்ற சொல், அவர்களின் வார்த்தைகளாகி மக்களின் இதயத்தை ஊடுருவி மனதை பக்குவப்படுத்தியது. தனி நபர்களின் ஆன் விடுதலைக்கு வித்திட்டது.

ஆனால் காந்திஜிக்கு??? அஹிம்சை என்பதே ஒரு ஆயுதமாயிற்று. சத்யாகிரகம் என்பது கேடயமாயிற்று. இந்த ஆயுதமும், கேடயமும் சம்பந்தப்பட்ட மனிதனை பக்குவப்படுத்தியது மட்டுமல்ல, ஹிம்சையை அரங்கேற்றியவர்களை சிந்திக்க வைத்தது. சில சமயம் மனமுருக செய்தது. மனம் இளகாதோரை விரட்டியடிக்கவும் செய்தது. தனிமனித விடுதலைக்காக உருவான அஹிம்சை ஒரு தேசத்தையே விடுவிக்கும் அளவிற்கு காந்திஜியால் வல்லமை பெற்றது. “என் வாழ்க்கையே ஒரு செய்தி” என்றார் காந்திஜி. – அவர் வாழ்விலிருந்து நாம் எதை பின்பற்றுவது? நிறவெறி காரணமாய் ரயிலிலிருந்து இறக்கி விடப்பட்ட அவமானத்தின்போது அதை ஒழித்துக்கட்ட எடுத்துக் கொண்ட சபதத்தையா? – ஏராளமான மக்கள் தன்னை வரவேற்க காத்திருக்கும்போது சகபயணியின் பெட்டியை தூக்கி கொண்டு வந்த தன்னடக்கத்தையா? பெட்டியை தூக்கி கொண்டு வந்ததற்காக இவன் கூலியை கொடுக்க, அவர் வாங்க மறுக்க.. இன்னும் அதிக கூலியை கேட்பதாக கோபப்பட்டு அவன் காந்திஜியை கன்னத்தில் அறைய… அதற்கு இன்னொரு கன்னத்தையும் காட்டி நின்றாரே… அந்த பொறுமையையா? – ராணுவமும் போலீசும் சூழ்ந்து கொண்டு குண்டாந்தடியால் அடித்து வீழ்த்தியபோதும் மௌனமாய் ஏற்றுக் கொண்ட சகிப்புத்தன்மையையா? – பொதுப்பணத்தை கறாராக செலவு செய்து.. சரியான கணக்கு வைத்து.. தனக்கென்று ஒரு காசையும் எடுத்துக் கொள்ளாத நேர்மையையா? – தன் உடைகளை தானே துவைத்து, கழிவறைகளை தானே கழுவி, அடுத்தவர்களை வேலை வாங்காத எளிமையையா? – வகுப்பு கலவரம் – வன்முறை – அடக்குமுறை நடக்கிறபோதெல்லாம் உண்ணாவிரதம் என்ற பெயரில் பல நாட்கள் பட்டினி கிடந்து தன்னையே வருத்திக் கொண்ட துன்பத்தையா? – காங்கிரசின் தலைவராகாமல், தேசத்தின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவி ஏற்காமல் விடுதலைக்கு பிறகும்கூட கிராமங்களுக்கு ஓடிச்சென்று ஏழை எளிய மக்களை அரவணைத்து நின்ற மனித நேயத்தையா? – தனது சொந்த செல்வாக்கை மூலதனமாக்கி வாரிசுகளை பதவியில் அமர்த்தாத அரசியல் ஒழுக்கத்தையா? – பிரார்த்தனைக்கு புறப்படும்போது காலில் விழுந்து கும்பிட்ட கயவனே நெஞ்சில் குறி பார்த்து சுட்டபோதும் “அவனை ஒன்றும் செய்யாதீர்கள்” என்று உயிர்போகும் தருணத்திலும் மன்னித்துச் சென்ற தியாகத்தையா?

வேண்டாம்…. எதையும் நாம் பின்பற்ற வேண்டாம்… நம்மால் எதையும் பின்பற்றவும் முடியாது… அப்படியானால் என்னதான் செய்வது? அவர் பிறந்த இந்த நன்னாளில் அவரை நம் நெஞ்சுக்குள் வைத்து நன்றி பாராட்டினாலே போதும்!