பதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏர்போர்ட் ஓட்டல் அறையில் உள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தற்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐநா அகதிகள் முகமை அவரது விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது.

இஸ்லாமை துறந்தால் தன்னை தனது குடும்பம் கொன்றுவிடும் என அஞ்சுவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவரது தந்தை மற்றும் சகோதரர் தாய்லாந்து வந்திருக்கின்றனர். எனினும் அவர்களை பார்க்க மறுத்துவிட்டார் ரஹாஃப்.

இந்நிலையில், ஐநா அகதிகள் முகமை இவரது விவகாரத்தை, அதாவது இவருக்கு மீள்குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஆஸ்திரேலிய அரசிற்கு பரிந்துரைத்தது.