பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட எஃகு படிக்கட்டின் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த ஒருவர் 1,69,000 யூரோவுக்கு (3,44,97,787 ரூபா) ஏலத்தில் வாங்கியுள்ளார்.

ஈஃபில் கோபுரத்தின் 20-க்கும் மேற்பட்ட இரும்புப் படிகள் செவ்வாய்க்கிழமை (27) ஏலம் விடப்பட்டன. கடுமையான போட்டிக்கு இடையில், மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த ஒருவர் 1,69,000 யூரோவுக்கு அவற்றை வாங்கினார்.

முன்னதாக, அந்தப் படிக்கட்டுகளை ஏலம் விட்டவர்கள் அவை 40,000 முதல் 60,000 யூரோக்களுக்கு விலை போகும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அதை விட ஏறத்தாழ 3 மடங்கு அதிகமாக அது விலை போனது.

பிரான்ஸைச் சேர்ந்த பொறியியலாளர் குஸ்தாவ் ஈஃபில், கடந்த 1889-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற சர்வதேச பொருட்காட்சியையொட்டி 324 மீட்டர் உயரமுள்ள இந்தக் கோபுரத்தைக் கட்டினார்.

ஈஃபில் கோபுரத்தில் மின்தூக்கிகள் அமைக்கும் பொருட்டு, கடந்த 1983-ஆம் ஆண்டு அதிலிருந்த படிக்கட்டுகள் நீக்கப்பட்டன. பின்னர், பல துண்டுகளாக வெட்டப்பட்டு அவை ஏலத்திற்கு விடப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை அருங்காட்சியகங்கள் வாங்கின.