ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையினால் இந்தியாவில் அதிக இதய நோய்கள் உள்ளன. 2016 இல், சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயால் மரணத்தை சந்தித்துள்ளனர். நோயின் உலகளாவிய சுமை, இந்திய மாநிலங்களில் 1990-2016 இடையே இதய நோய் மற்றும் அவற்றின் ஆபத்து காரணிகளின் வடிவ மாற்றுதல் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் படி, 2016-இல் சுமார் 2.8 மில்லியன் மக்கள் இதய நோயால் இறந்துள்ளனர் என்றும், இது 1990 இல் மரணித்த 1.5 மில்லியனை விட அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.

அப்படிப்பட்ட இதய நோயின் ஒரு நிலை தான் மயோகார்டிடிஸ் என்னும் இதய தசை அழற்சி ஆகும். சொல்லப்போனால் பலருக்கும் இந்த இதய நோயைப் பற்றி விரிவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இதய தசை அழற்சியின் அறிகுறிகள், காரணங்கள், சிக்கல்கள் குறித்து விரிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மயோகார்டிடிஸ் என்பது இதய தசைகளில் ஏற்பட்டுள்ள அழற்சி நிலையாகும். இது இதய தசைகள் மற்றும் இதயத்தின் மின் அமைப்பை பாதித்து, பம்ப் செய்வதற்கான உங்கள் இதயத்தின் திறனைக் குறைத்து விரைவான அல்லது அசாதாரண இதய தாளங்களை ஏற்படுத்தும். மயோகார்டிடிஸ் ஏற்படுவதற்கு வைரஸ் தொற்றுக்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட சில மருந்துகளின் தாக்கங்கள் அல்லது சில பொதுவான அழற்சி நிலையும் காரணங்களாக இருக்கலாம். ஒருவருக்கு கடுமையான இதய தசை அழற்சி இருப்பின், இதயம் பலவீனமாகி, உடலின் மற்ற பாகங்களுக்கு கிடைக்க வேண்டிய இரத்தம் கிடைக்காமல் போகும். மேலும் இதயத்தில் இரத்தக் கட்டிகள் உருவாகி, பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்றவற்றையும் உண்டாக்கலாம். இப்போது மயோகார்டிடிஸ் அல்லது இதய தசை அழற்சியின் அறிகுறிகள் என்னவென்று காண்போம்.

ஒருவருக்கு இதய தசை அழற்சி மிதமானதாகவோ அல்லது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலோ, எவ்வித அறிகுறியும் தெரியாது. அதுவே கடுமையாக இருந்தால், நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். அதில் சில பொதுவான அறிகுறிகளாவன: * மார்பு வலி * விரைவான அல்லது அசாதாரண இதய தாளங்கள் * மூச்சு விடுவதில் சிரமம் (ஓய்வு நிலையிலோ அல்லது ஏதேனும் வேலையில் இருந்தாலோ) * நீர்த்தேக்கத்தால் கால்கள், பாதங்கள் வீக்கத்துடன் காணப்படுவது * களைப்பு * இதர வைரஸ் தொற்றுகளின் அறிகுறிகளான தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், தொண்டைப்புண் அல்லது வயிற்றுப் போக்கு

குழந்தைகளுக்கு இதய தசை அழற்சி இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளாவன: * காய்ச்சல் * மயக்கம் * சுவாசிப்பதில் சிரமம் * வேகமாக சுவாசிப்பது * விரைவான அல்லது அசாதாரண இதய தாளங்கள்