பண்டிகைக் காலங்கள் வந்தாலே, நம் அனைவருக்குமே மனதில் சந்தோஷம் பொங்கும். ஏனெனில் பலவிதமான சுவையான உணவுகளை நாம் சுவைக்கலாம். முக்கியமாக வீட்டில் பலவிதமான பலகாரங்கள் செய்வார்கள். இதனால் நமக்கு பிடித்ததை வயிறு நிறைய திருப்தியாக சாப்பிடலாம் என்று பலரும் குஷியாக இருப்போம்.

ஆனால் இனிப்பு பலகாரங்களை சுவைக்கும் போது மட்டும், பலரது மனதில் எழும் ஓர் எண்ணம் தான் பல் சொத்தை. இத்தனை நாட்கள் இனிப்புக்களை அதிகம் சாப்பிடாமல் இருந்துவிட்டு, ஒரே நாளில் பலவிதமான இனிப்புக்களைச் சுவைப்போம். அதுவும் இந்த இனிப்பு பலகாரங்கள் ஒரு நாள் மட்டுமின்றி, ஒரு வாரம் முழுவதும் சுவைக்குமாறு வீட்டில் இருக்கும்.

நாம் என்ன தான் கட்டுப்பாட்டில் இருக்க நினைத்தாலும், நம்மால் வீட்டில் செய்த பலகாரங்களை அளவாக சாப்பிட முடியாது. ஆனால் இனிப்பு பலகாரங்களால் சொத்தைப் பற்கள் வராமல் இருக்க சிலவற்றை தவறாமல் பின்பற்றினால் போதும். கீழே அவை என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றுங்கள்.

சொத்தைப் பற்கள் வராமல் இருக்க வேண்டுமானால், இனிப்பு பலகாரங்களை சாப்பிடும் நாட்களில் மட்டுமின்றி, தினமும் இரவு தூங்கும் முன் ப்ளாஷ், அதாவது பல்லிடுக்கு நூல் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதனால் பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுகள் நீக்கப்பட்டு, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உருவாவது குறையும்.

இனிப்புக்களை உட்கொண்ட பின் தண்ணீரைக் குடியுங்கள். இப்படி தண்ணீர் குடிப்பதால், பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள இனிப்புக்கள் வெளியேறும். இதனால் சர்க்கரையினால் பற்களில் ஏற்படும் பாதிப்புக்கள் தடுக்கப்படும்.

கார்போனேட்டட் பானங்களான சோடா பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் சர்க்கரை மற்றும் அமிலம் அதிகமாக இருக்கும். இதனால் பற்களில் மட்டும் பாதிப்பு ஏற்படுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

மது அருந்துவதை அவசியம் குறைக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அது ஈறுகளில் பிரச்சனையை ஏற்படுத்தும், பல் சொத்தை உண்டாக்கும் மற்றும் இதர தேவையற்ற பல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் ஆல்கஹால் எச்சில் சுரப்பைக் குறைக்கும் என்பதால், வாய் வறட்சி அதிகரிக்கும். இதனால் வாய் துர்நாற்றம் கடுமையாக இருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களான பால், யோகர்ட் மற்றும் சீஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் உள்ள கால்சியம் பற்களை மறுவடிவமைக்க உதவுவதோடு, பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்கும்.

பற்களைத் துலக்கும் விதமும் பல் சொத்தையாவதைத் தடுக்கும். பற்களை துலக்கும் போது, எப்போதும் வாயின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தது 2 நிமிடம் ஒருவர் பற்களைத் துலக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இதுவரை நீங்கள் பல் மருத்துவரை சந்தித்ததே இல்லையென்றால், இனிமேல் பல் மருத்துவரை சீரான இடைவெளியில் சந்தித்து, பற்களை சோதித்துக் கொள்ளுங்கள். இதனால் பற்களில் மோசமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. வாய் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருந்தால் தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.