அதிக எடை மற்றும் உடல் பருமனான நபர்களின் நுரையீரலில் கொழுப்பு திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.

52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பிஎம்ஐ எனப்படும்​உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர்.

உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதையும், இந்த கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடையை குறைப்பதன் மூலம் இவர்களின் உடல் நிலையை சீராக மாற்றியமைக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐரோப்பாவில் உடலின் சுவாச அமைப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வில், தானமாக வழங்கப்பட்ட நுரையீரலின் பிரேத பரிசோதனை மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்ததில் பதினைந்து பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இல்லை என்றும், 21 பேருக்கு ஆஸ்துமா இருந்தது என்றும் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் பிற காரணங்களால் இறந்ததும் கண்டறிப்பட்டது. சுமார் 16 பேர் ஆஸ்துமா பாதிப்பாலேயே இறந்துள்ளனர்.

நுண்ணோக்கி மற்றும் சாயங்களை பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,400 சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

பிஎம்ஐ அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்பு திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி நுரையிரலை வீக்கமடைய செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா அபாயம் இருப்பதை விளக்குகிறது.

அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும் என இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் உள்ள இணை பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார்.

அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே நுரையீரல் வீக்கம் அடைந்துருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் டாக்டர் பீட்டர் நோபல்.

நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக இருப்பதே ஆஸ்துமா ஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்கு விளக்கம் தருகிறது என நம்புவதாக தெரிவிக்கிறார் டாக்டர் பீட்டர் நோபல்.