நம் உடலின் விலைமதிப்பில்லாத சொத்து என்றால் அது எலும்புகள்தான். ஏனெனில் எலும்புகளுடைய உதவியின் மூலம்தான் நாம் அனைத்து வேலைகளையும் செய்கிறோம், அதில் ஏற்படும் சிறிய பாதிப்பு கூட நம்முடைய ஒட்டுமொத்த இயக்கத்தையும் பாதிக்கக்கூடும். ஊட்டச்சத்து பற்றாக்குறையால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க இயலாது. ஆனால் வெளிப்புற செயல்களால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை நம்மால் தடுக்க இயலும்.

எலும்பு முறிவு என்பது எந்த வயதினருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம். ஆனால் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அவர்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கிவிடுகிறது. சில எலும்பு முறிவுகளை தகுந்த சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம், ஆனால் சில எலும்பு முறிவுகள் வாழ்க்கை முழுவதும் குணப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அதனை எவ்வளவு சீக்கிரம் குணப்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லது. இந்த பதிவில் எலும்பு முறிவை விரைவில் குணமாக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

செறிவூட்டப்பட்ட பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற பொருட்களில் கால்சியமும், வைட்டமின் டி-யும் அதிகம் உள்ளது, இந்த இரண்டும்தான் எலும்புகளின் ஆரோக்யத்திற்கு மிகவும் முக்கியமான ஊட்டச்த்துக்களாகும். சமீபத்தில் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் உங்கள் உணவில் இந்த பொருட்களை அதிகம் சேர்த்து கொள்வது எலும்புகள் குணமடைவதை தீவிரப்படுத்தும்.

பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு முறிவை குணப்படுத்த மிகவும் அவசியமாகும், ஆனால் சிலருக்கு பால் பிடிக்காது, சிலருக்கு ஒவ்வாமயை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள் சோயா பாலை குடிக்கலாம். இதிலும் பாலுக்கு இணையான கால்சியம் உள்ளது. பெண்களின் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படும் முக்கியமான பொருளாக இது உள்ளது. ஆரோக்கியமான உணவில் சோயா பால், ஒரு ஸ்பூன் எள், சிறிது தேன் மற்றும் பழங்கள் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உங்கள் முறிந்த எலும்புகள் குணமடையும்.

சுத்தப்படுத்தப்பட்டு, காய வைக்கப்பட்ட பூசணி விதைகளை சாப்பிடுவது உங்கள் உடலில் மக்னீசியத்தின் அளவை அதிகரிக்கும். நம் உடல் அதிகளவு கால்சியத்தை உறிஞ்ச வேண்டுமெனில் அதற்கு மக்னீசியம் மிகவும் அவசியமாகும். முறிந்த எலும்பை குணப்படுத்தும் போது மக்னீசியம் எலும்புகளின் வலிமை மற்றும் உறுதியை அதிகரிக்கிறது. இதனை தனியாகவோ அல்லது சாலட்களில் சேர்த்தோ சாப்பிடலாம்.

எளிதில் கிடைக்க கூடிய மத்தி மீனில் எலும்புகளை இணைக்கும் மற்றும் வலிமையாக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளது. பதின்ம வயதினருக்கு ஒரு நாளைக்கு 1300 மிகி கால்சியமும், பெண்களுக்கு 1200 மிகி கால்சியமும், ஆண்களுக்கு 1000 மிகி கால்சியமும் ஒருநாளைக்கு தேவைப்படுகிறது. மத்தி மீனை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இந்த அளவை நீங்கள் எளிதில் பெற்றுவிடலாம்.

அனைவர்க்கும் பிடித்த உணவான முட்டை கூட உங்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியத்தை மீட்டுத்தர கூடும். ஏனெனில் முட்டையில் கால்சியமும், மக்னீசியமும் குறைவாக இருந்தாலும் போதுமான அளவு புரோட்டின், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி உள்ளது. இது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.