திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார்.

தமிழுக்காகவும், தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் முதல்-அமைச்சர் இருக்கையை 5 முறை அலங்கரித்தவருமான 94 வயதான கருணாநிதி, கடந்த 1½ ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார்.

அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால், 11 நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் அளித்த சிகிச்சையை அவரது உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிய தொடங்கினார்கள்.

கருணாநிதியின் உடல்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அறிந்ததும் அங்கு கூடி இருந்த பெண் தொண்டர்கள் பலர் கதறி அழுதனர். போலீஸ் பாதுகாப்பும் அங்கு பலப்படுத்தப்பட்டது.

நேற்றும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மாலை 5.30 மணி அளவில் காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மு.க.தமிழரசுவின் மனைவி மோகனா, கருணாநிதியின் மகள் செல்வி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி காரில் புறப்பட்டு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றனர். காரை விட்டு இறங்கியதும் அழுதபடியே வீட்டிற்குள் சென்றனர்.

இந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, மாலை 6.10 மணிக்கு கருணாநிதி மரணம் அடைந்தார். ஓய்வறியா உதய சூரியன் மறைந்தது.

கருணாநிதி மரணம் அடைந்தது பற்றிய அறிக்கையை காவேரி ஆஸ்பத்திரி நிர்வாகம் மாலை 6.40 மணிக்கு அறிவித்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “நமது அன்புக்குரிய கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதியின் மறைவுச் செய்தியை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வேதனை அடைகிறோம். அவர் 7-ந்தேதி (நேற்று) மாலை 6.10 மணிக்கு மறைந்தார். எங்களது டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழு இணைந்து மிகச் சிறந்த முயற்சிகளை எடுத்த போதிலும் அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை இழந்ததில் நாங்கள் மிகுந்த துயரை அடைகிறோம். மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களின் துயரத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம்” என்று கூறப்பட்டு இருந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உயிர் பிரிந்த நேரத்தில், அருகே அவரது மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, துணைவியார் ராஜாத்தியம்மாள், மகள் கனிமொழி எம்.பி. மற்றும் குடும்பத்தினர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தனர். அவர்கள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும், அங்கிருந்த கருணாநிதியின் டாக்டர் கோபால், உதவியாளர் நித்யா சோகம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.

ஆஸ்பத்திரிக்கு வெளியே கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேட்டதும் தலையிலும், மார்பிலும் கைகளால் அடித்துக்கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

பின்னர் கருணாநிதியின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு உறவினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.