கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று மாலை தமிழக பா.ஜ.க. தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது அரசியல் வாழ்க்கை என்றுமே நேர்மையானது தான். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை. அதே போல் என்னை அரசியலை விட்டு நீக்க சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை.

நான்தான் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க.வினர் பேசிக் கொண்டிருக்கின்றனர் என கூறினேன். இல்லையென்று அவர்கள் நிரூபிக்கட்டும். அவர் சார்பாக யாராவது பேசி இருக்கலாம். அவர் சார்பாக யாரும் பேசவில்லை என நிரூபிக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

சந்திரசேகரராவை சந்தித்த பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசவில்லை. ராகுல்காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என அவர் கூறவில்லை. இன்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்துவிட்டு, சந்திரசேகரராவை சந்தித்தது ஒன்றுமில்லை என்று சொல்வதற்காக போனோம் என துரைமுருகன் கூறுகிறார். அவர்கள் நிறம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரசேகர ராவை பார்க்கிறார்கள்.

சந்திரபாபு நாயுடுவிடம் தூது விடுகிறார்கள். அதே போல் பா.ஜ.க.வுக்கும் தூதுவிட்டு இருக்கிறார்கள். ஸ்டாலின் சொல்வதற்காக உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்றில்லை. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் இதை நான் கூறுகிறேன். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற பாரம்பரியத்தில் நான் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.