இந்திய நாட்டின் அடுத்த மத்திய அரசைத் தீர்மானிக்கப் போகும் 17வது மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்கிய நிலையில், இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அன்றைய நாளின் சிறப்பை டூடுலாக வெளியிடுவதை கூகுள் நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவில், 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற உள்ளது. அதன் முதல்கட்டமாக, 18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நாளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் கருப்பு மை வைக்கப்பட்ட விரலை டூடுலாக வெளியிட்டு உலகிலேயே இந்த நாளின் முக்கிய நிகழ்வாக இந்திய தேர்தலை குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த கூகுள் டூடலை கிளிக் செய்யும் போது, இந்திய மக்களவைத் தேர்தல் குறித்த அடிப்படைத் தரவுகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் பல விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எவ்வாறு வாக்களிப்பது? வாக்குச்சாவடிக்குள் சென்று எப்படி வாக்களிக்க வேண்டும்? வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? வேட்பாளர்களின் பெயரை எப்படி தெரிந்துகொள்ள வேண்டும்? வாக்குச்சாவடியை எப்படி அடையாளம் காண வேண்டும்? வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? VVPAT என்றால் என்ன? போன்ற பல அடிப்படை கேள்விகளுக்கு இந்த பக்கத்தில் பதில் இடம்பெற்றுள்ளன.

இவைதவிர்த்து, வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனு குறித்த விபரங்களையும், தேர்தல் தேதி குறித்த தகவல்களும் அந்த பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.