தற்போது பல ஹோட்டல்களில் நின்று கொண்டே தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இன்றைய அவசர உலகில் நம்மால் பொறுமையாக உட்கார்ந்து எதையும் சாப்பிடும் நிலைமையில் இல்லை. எதற்கு எடுத்தாலும் அவசரம், எதிலும் அவசரம் தான். வாழ்வதற்காக நாம் உழைக்கலாம். ஆனால் வெறுமனே உழைத்து என்ன பயன். உழைப்பதற்கும், வாழ்வதற்கும் உயிர் வேண்டுமல்லவா? உயிர் வாழ வேண்டுமானால், உண்ணும் உணவுகளால் நல்ல பலன் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அமர்ந்து நிதானமாக நன்கு மென்று உணவை விழுங்க வேண்டும்.

உணவை உண்ணும் போது நின்று கொண்டே சாப்பிடுவது என்பது ஒரு கெட்ட பழக்கம். இப்பழக்கம் உங்களிடம் இருப்பின் அதை உடனே மாற்றுங்கள். எப்படி தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாதோ, அதேப் போல் தான் உணவு உண்ணும் போதும் நின்று கொண்டு உண்ணக்கூடாது. அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நின்று கொண்டே ஒருவர் உணவை உண்ணும் போது, வயிறு நிறைந்துவிட்டதா அல்லது இல்லையா என வயிற்றிற்கே குழப்பம் ஏற்பட்டுவிடும். நின்று கொண்டு உணவை உண்ணும் போது எவ்வளவு உண்டாலும் வயிறு நிறைந்த உணர்வையே பெறமாட்டீர்கள், வேண்டுமானால் நின்று கொண்டு சாப்பிடும் போது கவனித்துப் பாருங்கள். இதனால் ஒருவர் அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடும். ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுப்பதோடு, பல ஆரோக்கிய சிக்கல்களையும் உண்டாக்கும். எனவே நின்று சாப்பிடும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணும் போது, செரிமான மண்டலத்தில் உணவுகள் அதிகமாகி உணவுகளை ஜீரணிக்க முடியாமல் செரிமான செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, வயிற்று உப்புசத்தை சந்திக்க நேரிடும். அதேப் போல் வேகமாக உணவை உண்ணும் போது, உணவுகளை உடைதெறியும் செயல்பாடு வேகமாக்கப்பட்டு, உணவுகளில் உள்ள சத்துக்களை குடலால் உறிஞ்ச முடியாமல் போய், வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை ஏற்படும். பொதுவாக வயிற்றில் உள்ள செரிமானமாகாத கார்போஹைட்ரேட்டுகள் புளிக்கப்பட்டு தான், வயிற்று உப்புசத்தை உண்டாக்குகின்றன.

உணவை சாப்பிடும் போது, அந்த உணவு சரியாக செரிமானமாவதற்கு நீங்கள் சாப்பிடும் நிலைகள் மிகவும் முக்கியம். நீங்கள் நின்று கொண்டு என்ன சாப்பிட்டாலும், அது செரிமானமாகாமல் நேரடியாக குடலை அடைந்துவிடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் குடலில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு, செரிமான பிரச்சனையை உண்டாக்குகின்றன. சிலர் இதன் விளைவாக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றால் அவஸ்தைப்படுவார்கள்.

எந்த ஒரு உணவை உண்பதாக இருந்தாலும், அந்த உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும். ஒருவர் நின்று கொண்டு, உணவுகளை சரியாக மெல்லாமல் விழுங்கினால், அதன் விளைவாக அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். உணவுகள் செரிமானமாவதற்கு அந்த உணவுகளை மென்று விழுங்குவது என்பது மிகவும் முக்கியமாகும். எனவே என்ன அவசரமாக இருந்தாலும், உணவுகளை நன்கு மென்று விழுங்குங்கள்.

பார்ட்டிக்கு சென்று நன்கு வயிறு நிறைய உணவை உண்டு வீட்டிற்கு வந்த பின், மீண்டும் கடுமையான பசியை உணரக்கூடும். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? அது வேறொன்றும் இல்லை, நீங்கள் நின்று கொண்டு சாப்பிட்டது தான். பொதுவாக உணவை நின்று கொண்டு சாப்பிடும் போது, அந்த உணவானது 30 சதவீதம் தான் செரிமானமாகி, உடலில் சேர்கிறது. இதனால் தான் நீங்கள் நின்று கொண்டு உணவு உண்ட சில மணிநேரங்களிலேயே மீண்டும் பசி உணர்வு ஏற்படுகிறது.