11வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதிப்போட்டி இன்று மும்பை வாகன்டே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், 6 அணிகள் வெளியேறி இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் சன்ரைசர் அணியும் மோதவிருக்கின்றன.

இன்று நடக்கும் போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சிஎஸ்கே-வின் பலம் அசத்தல் பேட்டிங். அம்பத்தி ராயுடு, வாட்சன், சுரேஷ் ரெய்னா, டுபிளிசிஸ், கேப்டன் தோனி ஃபார்மில் உள்ளனர். ஏதாவது ஒரு போட்டியில் யாராவது ஒரு வீரர் நின்று ஆடிவிடுகிறார் என்பதால் இந்தப் போட்டியிலும் அதையே எதிர்பார்க்கலாம்.

ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றது. ஆனால், இரண்டாவது தகுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்து விட்டது. இதற்கு ஒரே காரணம் அந்த அணியின் ரஷித் கான். பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என மூன்றிலும் கலக்கினார் ரஷித். அவர் இன்றைய போட்டியில் சிஎஸ்கே-வுக்கு சவாலாக விளங்குவார். அவர் ஆட்டத்தைப் பொறுத்தே இன்றைய போட்டியின் முடிவும் இருக்கும்.

இந்த தொடரில் ஹைதராபாத் அணி, சென்னையை வென்றதில்லை. இரண்டு லீக் போட்டியிலும் ஒரு பிளே ஆப் சுற்றிலும் ஹைதராபாத்துடன் மோதியுள்ள சிஎஸ்கே, மூன்றிலும் வெற்றிதான் பெற்றிருக்கிறது.

மும்பை வான்கடே மைதானமும் டாஸும் இன்றைய போட்டியில் முக்கியத்துவம் பெறும். இங்கு இந்த தொடரில் நடந்துள்ள 8 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 4 முறையும், 2 வது பேட் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது