வலது மையவாதிகள் மற்றும் இடது மையவாதிகளின் கூட்டணி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை இழந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தாராளவாதிகள், பசுமைவாதிகள் மற்றும் தேசியவாதிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

வலது மையவாதிய ஐரோப்பிய மக்கள் கட்சி பெரிய கூட்டணியாக பார்க்கப்பட்டது. அவர்கள்தான் வெல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் தாராளவாதிகள், பசுமைவாதிகள் மற்றும் தேசியவாதிகளுக்கான ஆதரவு பெருகி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் சில தகவல்கள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் இது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பணி ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சட்டங்களை இயற்றுவதாக இருக்கும்.

விகிதாசார முறையில் நடக்கும் தேர்தல் இது. விகிதாசாரத்திற்கு ஏற்ப கட்சிகளின் பிரதிநிதித்துவம் இருக்கும்.

751 தொகுதிகள் இருந்த நாடாளுமன்றத்தில் வலது மையவாத கட்சியான ஐரோப்பிய மக்கள் கட்சியிடம் 217 இடங்களும், இடது மையவாத கட்சியான சோஷியலிஸ்ட்டுகள் மற்றும் டெமாகிரேட்டுகளிடம் 186 இடங்களும் இருந்தன.

இந்த தேர்தலில் பிரிட்டன் இருக்கிறதா?

ப்ரெக்சிட் காரணமாக இந்த கேள்வி எழுகிறது. இன்னும் ஒன்றியத்தில் இருந்து மார்ச் 29-ம் தேதி பிரிட்டன் விலகியிருக்கவேண்டும். ஆனால், விலகுவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், இந்த தேர்தலில் பிரிட்டனும் பங்கேற்கும் சூழ்நிலை உருவானது.

என்னென்ன விஷயங்கள்?

இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருப்பது குடியேற்றம், பொருளாதார பிரச்சனை மற்றும் பருவநிலை மாற்றம்.

தற்போதைய நிலவரம் என்ன?

வலது மையவாதிகள் 179 இடங்களிலும், சோஷியலிஸ்ட் மற்றும் டெமோகிரேட்ஸ் 150 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்கள்.

இது கடந்த தேர்தலில் அவர்கள் பெற்ற இடங்களை விட குறைவு.

இந்தத் தேர்தலில் தாராளவாதிகள் 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். கடந்த தேர்தலைவிட 40 இடங்கள் இது அதிகம்.

பசுமை கட்சியினர் 70 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். இது கடந்த தேர்தலைவிட 20 இடங்கள் அதிகம்.

வலதுசாரி தேசியவாதிகளும், பழமைவாதிகளும் 58 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.

பாப்புலிஸ்ட்டுகள் 56 இடங்களிலும், இடதுசாரிகள் 38 இடங்களிலும் , பிறக் கட்சிகள் 28 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்கள்.