கட்டுநாயக்க விமான நிலையத்தில், ஐஸ் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்படுகின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாத்தளை பகுதியைச் சேரந்த ஒருவரே பிரதான கடத்தல்காரராக உள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களை 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வந்த சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 45 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.