பொறுப்புகூறல் மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்துடன், நிலையான சமாதானம் ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசின் அணுசரணையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட கருப்பு யூலை இனப்படுகொலையின் 35-ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கு அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கனேடியப்பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் சிங்கள பேரினவாத அரச இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட ஜுலை கலவரங்களால் பாதிக்கப்பட்ட கனடா வாழ் தமிழர்களுக்கும், உலக வாழ் தமிழர்களுக்கும் கனேடியப் பிரதமர் அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜுலை கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் தாமும் இணைவதாக கூறியுள்ள கனேடியப் பிரதமர் கறுப்பு ஜுலை காலப் பகுதியில் தமது அன்புக்குரியவரை இழந்தவர்கள் மற்றும் துன்பப்பட்டவர்ளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் பொறுப்புகூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கம், நீடித்த சமாதானம் மற்றும் செழிப்பு ஏற்படுத்தப்படும் என கனடா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜுலை கலவரம் ஏற்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், பலர் வீடுகளை விட்டு இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டதை இந்த நாளில் நினைவுகூருவதாக கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பு ஜுலை காலப்பகுதியில் குடும்பத்தினரையும், நண்பர்களையும் இழந்த கனடா வாழ் தமிழர்கள் மற்றும் உலக வாழ் தமிழர்களின் துக்கத்துடன் தாமும் இணைவதாக ஜெஸ்ரின் ட்ரூடோ கூறியுள்ளார்.

நிலைத்திருக்ககூடிய மனித அழிவை பிரதிபலிக்கும் வகையிலான கறுப்பு ஜுலை கலவரமானது தசாப்தகால பதற்றத்தை அடுத்து ஒரு வாரத்தில் ஏற்படுத்தப்பட்ட அழிவாகவும் பாரிய வன்முறையாகவும் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட ஆயுத முரண்பாடுகள் காரணமாக பல்லாயிரகணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட வன்முறைகளை கையாளுவதற்கென விசேட நடவடிக்கை திட்டமொன்றை கனடா அமுல்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் ஆயிரத்து 800 தமிழர்களுக்கு கனடா பாதுகாப்பை வழங்கியதாக குறிப்பிட்ட ஜெஸ்ரின் ட்ரூடோ அவர்கள், நாட்டிற்கு வழங்கிய பங்களிப்புக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

2009-ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நல்லிணக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீடித்த சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு சிவில் சமூகங்கள் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கனேடிய அரசாங்கம் நெருக்கமாக பணியாற்றிவருவதாகவும் ஜெஸ்ரின் ட்ரூடோ கூறியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அர்த்தமுள்ள பொறுப்புகூறல் பொறிமுறை அவசியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.