திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த விளையாட்டு ரசிகர், ஆர்வலர். குறிப்பாக கிரிக்கெட் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். அவர் கபில்தேவ் மற்றும் தோனியின் மிகப் பெரிய ரசிகராக இருந்துள்ளார் கருணாநிதி. சில நேரங்களில் இவர்கள் விளையாடுவதை பார்ப்பதற்காகவும், இந்திய அணியின் போட்டியை பார்க்கவும், தனது மற்ற வேலைகளை ஒத்திவைத்துள்ளார்.

இதை தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதியே தெரிவித்துள்ளார். இதைத் தவிர சச்சின் டெண்டுல்கர் என்றால் கருணாநிதி உருகிவிடுவார். சச்சினின் பிளேயிங் இட் மை மே என்ற சுயசரிதை 2014ல் வெளியானது. அதை முழுமையாக படித்துவிட்டு, சச்சினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் கருணாநிதி.

2011ல் உலகக் கோப்பையை வென்ற தோனி மற்றும் தமிழக வீரர் அஸ்வினுக்கு பரிசும் அளித்தார் கருணாநிதி.

அவருடைய மறைவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் தொடரில் அவர்கள் விளையாடி வருகின்றனர்.

இவர்களைத் தவிர எஸ். பத்ரிநாத், வி.வி.எஸ். லக்ஷ்மண், வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் வீரர்களும் இரங்கல் செய்திகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். ஹர்பஜன் சிங் தமிழில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதைத் தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் அதன் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.