நடிகை பூஜா ஹெக்டே குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கினார் என்று வெளியான தகவல் தொடர்பாக அவரின் மேனேஜர் ஹரி விளக்கம் அளித்துள்ளார்.

ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே. அவர் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த மகார்ஷி தெலுங்கு படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மகரிஷி பட ரிலீஸுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா மூக்கு முட்ட குடித்துவிட்டு காரை ஓட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு சென்ற வழியில் போலீசாரிடம் சிக்கினார் என்ற தகவல் தீயாக பரவியது.

குடிபோதையில் இருந்த பூஜாவை வேறு ஒரு காரில் ஏற்றி ஹோட்டலுக்கு அனுப்பி வைத்துவிட்டார் அவரின் மேனேஜர் ஹரி என்று தகவல் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து ஹரி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

பூஜா பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை. தனக்கு பழக்கம் இல்லாத ஹைதராபாத் நகரில் அவர் ஏன் கார் ஓட்டப் போகிறார்?. அவருக்கு இரவு 12.20 மணிக்கு ஃபிளைட் என்பதால் அவரை விமான நிலையத்தில் இறக்கிவிடுமாறு கூறி படத் தயாரிப்பு குழு காருடன் டிரைவரை அனுப்பியது என்கிறார் பூஜாவின் மேனேஜர் ஹரி.