தன்னை கைது செய்ததை கண்டித்து தனக்காக கண்டன குரல் கொடுத்த அனைவருக்கும் நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக தனக்காக பேசிய பத்திரிகையாளர் இந்து என்.ராமிற்கு நன்றியை உரித்தாக்கி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதேபோல, கோபாலை கைது செய்தது அச்சுறுத்தல் நடவடிக்கை என்றும், உடனடியாக அவரை விடுவிக்க கோரியும் பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் சிந்தாதிரிப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று கூறி, அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த நக்கீரன் கோபால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஏப்ரலில் வெளியிட்ட செய்திக்கு இப்போது தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தன்னை கைது செய்த போது காரணம் ஏதும் கூறவில்லை. தனது செல்போனை பறித்து கொண்டனர். கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பக்க பலமாக நீதிமன்றம் நின்றிருக்கிறது. இந்த போரில் வெல்ல உதவிய அத்தனை ஊடக நண்பர்களுக்கும், திறமையாக வழக்காடிய வக்கீல்களுக்கும் என் நன்றிகள்.

தன் கைதுக்காக கண்டித்து குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. குறிப்பாக எனக்காக பேசிய பத்திரிக்கையாளர் இந்து என்.ராமிற்கு என் நன்றிகள். அதேபோல, தம்மை வந்து நேரில் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.