பிரதமர் தெரசா மே இன்று வெள்ளிக்கிழமை கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகுகிறார். எனினும் கட்சியின் தலைவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பிரதமர் பதவியை வகிக்கவுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் தான் பதவிவிலகுவது குறித்து அறிவித்தார். அத்துடன் தனது காலத்தில் பிரெக்ஸிற்றை வழங்க முடியவில்லை என்பதற்காக ஆழ்ந்த வருத்ததையும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு கட்சியின்  சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

போட்டியின் வெற்றியாளர் யார் என்பது குறித்து ஜூலை 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் பிரதமர் தெரேசா மே கொன்சர்வேற்றிவ்  கட்சியின் தலைவராக செயல்படவுள்ளார்.

2016 ஆம் ஆண்டு பிரெக்ஸிற் குறித்த மக்கள் வாக்கெடுப்பில் பிரெக்ஸிற்றுக்கு மக்கள் வாக்களித்ததன் காரணமாக அப்போதைய பிரதமர் டேவிட் கமரன் பதவிவிலகிச் செல்ல கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான தெரேசா மே அம்மையார் கட்சியின் தலைவராகி பிரதமரானார்.

மூன்று ஆண்டுகள் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் பிரதமராகவும் பதவிவகித்த காலத்தில் பிரெக்ஸிற் பிரச்சினை கட்சியின் ஒற்றுமையைச் சீர்குலைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மே செய்துகொண்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றில் ஆதரவு இல்லாமல் மூன்று முறையும் தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலைமையே கட்சியில் அவருக்கு கடுமையான நெருக்கடிகளைத் தோற்றுவித்து தலைமைப் பொறுப்பில் இருந்து விலகும் முடிவுக்கு கொண்டுவந்தது.

பிரதமர் டேவிட் கமரன் ஆட்சியில் ஆறு ஆண்டுகள் உள்துறை அமைச்சராக பதவி வகித்த தெரேசா மே அம்மையார் தனது பணியைச் சிறப்பாகச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.