விராட் கோலி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஒரு கிரிக்கெட் ரசிகரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறி இருக்கிறார் கோலி. விராட் கோலி ஒரு “ஆன்ட்ராய்ட் ஆப்” அறிமுகப்படுத்தினார். அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சி இடம் பெற்றது. கோலி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது

அந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் “கோலி அதிகப் படியாக பில்டப் கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன். தனிப்பட்ட முறையில் இவரது ஆட்டத்தில் நான் எந்த சிறப்பையும் காணவில்லை. இந்த இந்தியரை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை ரசித்து பார்க்கிறேன்” என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் கருத்து கூறி இருந்தார்.

அதை படித்துக் காட்டிய கோலி, “நீங்கள் இந்தியாவில் இருக்கத் தேவையில்லை. வேறு எங்கேயாவது போய் வாழலாமே. அது என்ன இந்தியாவில் இருந்து கொண்டு வேறு நாடுகளை பிடித்திருப்பது? உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பது பிரச்சனை இல்லை. ஆனால், நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு மற்றவற்றை பிடித்திருக்கிறது என கூறுவது சரியல்ல. உங்கள் விருப்பங்களை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்” என கூறினார் கோலி.

கோலியின் இந்த கருத்து கடும் எதிர்வினையை சந்தித்து வருகிறது. கோலி அவரை பிடிக்காத ஒரு ரசிகரை “இந்தியாவை விட்டு வெளியே போ” என கூறியுள்ளார் என ஒரு சாராரும், அந்த கிரிக்கெட் ரசிகர் இந்தியராக இருந்து கொண்டு மற்ற நாட்டு வீரர்களை ரசிப்பது தவறு எனக் கூறுகிறாரா கோலி? இப்படி சொல்வது சரிதானா? என மற்றொரு சாராரும் கோலியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.