தளபதி விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3,400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்கார் படம் வெளியாகியுள்ளது. படம் வெளியானது முதல் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், வசூலிலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த நிலையில், சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மிரட்டல் விடுத்துள்ளார்.
கோவில்பட்டி சென்றிருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ளன. இது வளர்ந்து வரும் விஜய்க்கு நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்காரில் இடம் பெற்றுள்ள அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து ஆலோசித்து சர்கார் சர்ச்சைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.