இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மத்திய அரசு சிலை வைத்துள்ளது. படேலுக்கு சிலை அமைத்ததை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், படேல் சிலை குறித்து பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் விமர்சனம் செய்துள்ளார்.மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், அதேசமயத்தில் இந்தியா மிகப் பெரிய சிலை செய்வதற்கு 3000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது முட்டாள்தனமானது என்றும் பீட்டர் போன் கூறினார்.

இந்த அளவுக்கு செலவு செய்து பிரமாண்ட சிலையை அவர்களால் செய்ய முடியும் என்றால், அந்த நாட்டிற்கு நாம் உதவி வழங்க தேவையில்லை என்றும் பீட்டர் குறிப்பிட்டார். இதேபோல் மேலும் சில பிரிட்டன் எம்பிக்களும் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கக்கூடாது என்று தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.