சிரியாவில் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதிகளில், ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், இராக் எல்லை அருகே கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மணி நேரமாக நடந்து வரும் சண்டையில், இஸ்லாமிய அரசின் நிலைகள் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் வான் மற்றும் தரை வழியாகத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

சிரியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த சிறிய பகுதியில் ஐ.எஸ் அமைப்பினர் சுமார் 600 பேர் சண்டையிட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அவர்கள் பலம் உச்சத்தில் இருந்த 2014 காலகட்டத்தில், ஐ.எஸ் கட்டுப்பட்டுப் பிராந்தியத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 77 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். அப்பிராந்தியத்தின் பரப்பளவு பிரிட்டனின் பரப்பளவுக்கு நிகரானதாக இருந்தது.

ஒரு வாரத்துக்கும் மேலாக நிலவிய சண்டை நிறுத்தம் காரணமாக, சுமார் 20,000 குடிமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறியபின், ‘ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான இறுதித் தாக்குதல்’ தொடங்கும் என சிரியா ஜனநாயகப் படைகள் எனப்படும் கூட்டணிப் படைகளின் செய்தித்தொடர்பாளர் முஸ்தஃபா பாலி கூறியிருந்தார்.

“ஐ.எஸ் வசமிருந்த பிராந்தியங்கள் 100% மீட்கப்பட்டபின், அடுத்த வாரம் படைகள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வரும்,” என்று புதன்கிழமை அவர் தெரிவித்தார்.