எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று (09) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து தௌிவுபடுத்தப்பட்டது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவது, இல்லையென்றால் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவது, அவ்வாறில்லாத பட்சத்தில் மௌனமாக இருப்பது என 3 மாற்று வழிகள் காணப்பட்டபோதும் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில் மௌனமாக இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பள்ளத்தில் வீழ்ந்துள்ளபோது, மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் நிலைப்பாட்டுடன் பயணிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் இந்தத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

அதேநேரம், சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவளிப்பதாகக் கூறிய அவர் பொதுஜன பெரமுன மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவுடன் உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இயலாது போனாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏற்ற வகையில் கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என்ற புதிய பெயர் சூட்டப்படவுள்ளது. அதில் அதிகாரப் பகிர்வு குறித்தும் இணக்கம் காணப்பட்டுள்ளது. கட்சியின் அடையாளத்தையும் மக்கள் பிரதிநிதிகளின் அடையாளத்தையும் அவர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்காக முழு ஆதரவையும் வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார்.