சென்னை நகரவாசிகள் ஷவரில் குளிப்பதற்கு பதிலாக பக்கெட்டில் இருந்து நீரை எடுத்துக் குளித்தால் சுமார் 82 லிட்டர் தண்ணீரை ஒவ்வொருவரும் சேமிக்கலாம் என்கிறது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்.

சென்னை நகருக்கு தினமும் 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்றாலும் தற்போது 550 மில்லியன் லிட்டர் மட்டுமே நகரவாசிகளுக்கு விநியோகம் செய்யமுடிகிறது என்பதால், மக்கள் பயன்பாட்டில் சிக்கனத்தை கடைப்பிடித்தால், ஒவ்வொருவரும் தினசரி பயன்பாட்டில் 300 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என விழிப்புணர்வு செய்தியை அரசு வெளியிட்டுள்ளது.

குளிப்பதில் தொடங்கி கார் உள்ளிட்ட வண்டிகளை கழுவுவதற்குப் பயன்படுத்துவதுவரை நீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

துணிகளை துவைக்கும்போது குழாயில் தண்ணீரை திறந்துவிட்டு அலசுவதற்கு பதிலாக, பக்கெட்டில் நீரை பிடித்துவைத்து அலசினால், 116 லிட்டர் செலவாகும் இடத்தில் வெறும் 36 லிட்டர் மட்டுமே செலவாகும் என்று கூறப்படுகிறது.