களிமண் என்பது செவ்வாய் கிரகத்தில் ஒரு மிகப்பெரிய விசயம், ஏனென்றால் அது பெரும்பாலும் தண்ணீருடன் தொடர்பு கொள்வதன் மூலமே உருவாகிறது. எனவே களிமண்ணை கண்டுபிடிப்பதன் மூலம் வழக்கமாக நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியும். செவ்வாய் கிரகத்தின் இயல்பு, வரலாறு, தற்போதைய நீர் அளவு அனைத்தும் அந்த கிரகத்தை புரிந்து கொள்ள மிகவும் முக்கியமானவை மற்றும் இதன் மூலம் அங்கு உயிரினங்கள் எப்போதாவது வாழ்ந்தனவா என்பதையும் அறிய முடியும்.

இப்போதைக்கு எம்எஸ்எல் க்யூரியாசிடி விண்கலம் மவுண்ட ஷார்ப் பகுதியில் களிமண்ணை தேடி பாறைகளை ஆய்வு செய்துவருகிறது. மவுண்ட் ஷார்ப்-ல் களிமண் இருப்பதற்கான ஆதாரங்களை முதன்முதலாக ஆர்பிட்டர் விண்கலங்கள் கண்டுபிடித்தன. நாசா எம்எஸ்எல் க்யூரியாசிடி விண்கலம் தரையிறங்கும் தளமாக பள்ளத்தாக்கை தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய காரணம், இப்பள்ளதாக்கின் உள்ளே உள்ள மவுண்ட் ஷார்ப்-ல் களிமண் ஆகும்.

‘களிமண் தாங்கி அலகு’ என்று நாசாவால் அழைக்கப்படக்கூடிய இரண்டு பாறைகளின் மாதிரியை க்யூரியாசிடி விண்கலம் சேகரித்து ஆராய்ந்த பிறகு, அதில் களிமண் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் இதுவரை க்யூரியாசிடி கண்டுபிடித்ததிலேயே இந்த இரண்டு பாறைகளில் தான் மிகவும் அதிக அடர்த்தியுள்ள களிமண் காணப்படுகிறது. இவ்விரு பாறைகளும் “அபெர்லேடி” மற்றும் “கில்மேரி” என்று அழைக்கப்படுகின்றன. இது மிஷனின் முதன்மை நோக்கமாக கருதப்படும் மவுண்ட் ஷார்பின் கீழ் பகுதியில் இவ்விரு பாறைகளும் அமைந்துள்ளன.